பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் தொடர்ந்து காவியுடை அணிய அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதை, சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட பௌத்த பீடங்களே (நிகாயாக்கள்) தீர்மானிக்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (13) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட நிகாயாக்களுடன் கலந்தாலோசிக்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றால், சம்பந்தப்பட்ட பௌத்த பீடத்துக்கு அறிவிக்கப்படும். அதேவேளை, பௌத்த விவகார ஆணையாளர் ஊடாக மூன்று நிகாயாக்களையும் சேர்ந்த நான்கு மகாநாயக்க தேரர்களிடமிருந்து வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
“சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்கு ஒருவர் தொடர்ந்து காவியுடை அணிய வேண்டுமா, இல்லையா என்பதை அவர் சார்ந்த நிகாயாவே தீர்மானிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இதனைச் சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானிக்கக் கூடாது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரின் காவியுடை விவகாரம் தொடர்பில் விசாரணை
இதேவேளை, கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் இருந்தபோது அவரது காவியுடை அகற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதிலளித்துள்ளார்.
நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி, ஞானசார தேரரின் காவியுடை அகற்றப்படுவதைப் பார்ப்பதற்கு அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவருக்கு வாய்ப்பளித்ததாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இந்த விவகாரம் பாரதூரமானது என்றும், இதனை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் திணைக்களம் இலங்கைப் பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னர், உதய கம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த சம்பவம் உண்மையில் இடம்பெற்றதா, அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அது எவ்வாறு நடந்தது என்பதைக் கண்டறிவதே விசாரணையின் நோக்கம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், விசாரணையின்போது சம்பவம் தொடர்பில் தாம் நேரில் கண்டவை, கேட்டவை அல்லது பிறரிடமிருந்து அறிந்துகொண்டவை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உதய கம்மன்பில வெளிப்படுத்துவார் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.








