மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பராமரிப்பின் கீழுள்ள வீதிகளை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) கீழ் தேசிய வீதிகளாகத் தரமுயர்த்துவதற்கான முறையான நடைமுறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழுள்ள வீதிகளை மதிப்பீடு செய்து, அவற்றை வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கையளிப்பதற்கான நடைமுறையை உருவாக்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, இவ்வாறு தேசிய வீதிகளாகத் தரமுயர்த்தக் கோரப்படும் வீதிகள், அடிப்படைத் தகைமைகள், தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகள் மற்றும் ஏனைய தொடர்புடைய அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.
இந்த மதிப்பீடுகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதிகளைக் கையேற்கும் குழு மேற்கொள்ளும். அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தகுதியுடைய வீதிகளைத் தேசிய வீதிகளாக அறிவிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகார வரம்புக்கு வெளியே உள்ள வீதிகளைப் பொறுப்பேற்பது மற்றும் அவற்றைப் பராமரிப்பது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் குறித்த குழுவை நியமிப்பதற்கு கடந்த 2026 ஜூலை 20ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களால் முன்வைக்கப்படும் முன்மொழிவுகளை ஆராய்வதுடன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பராமரிப்பின் கீழுள்ள வீதிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கையளிப்பது தொடர்பான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதும் இந்தக் குழுவின் பொறுப்பாகும்.
மேலும், இவ்வாறு கையளிக்கப்படும் வீதிகளைப் பராமரிப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் பணியாளர் தேவைகளைக் கண்டறிவதும் இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தகுதியுடைய வீதிகளைத் தேசிய வீதிகளாகத் தரமுயர்த்துவதற்கான கட்டமைக்கப்பட்ட மதிப்பீட்டு நடைமுறையை முன்னெடுக்க அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.








