அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தைப் பொது – தனியார் பங்காளித்துவ (PPP) முறையின் கீழ் நவீனமயப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த நிறுவனத்தை நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட, உயர் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய அச்சிடல் மையமாக மாற்றும் நோக்கில், புதிய மூலோபாய பல்வகைப்படுத்தல் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் செயற்படும் பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்வைத்த ‘Smart Print Initiative’ எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1968ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரச அச்சகக் கூட்டுத்தாபனம், பாடசாலைப் பாடநூல்கள், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வெளியீடுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்குத் தேவையான ஆவணங்களை அச்சிடும் பிரதான அரச நிறுவனமாகச் செயற்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக இலாபம் ஈட்டியுள்ள போதிலும், பழைய இயந்திரங்கள் மற்றும் காலாவதியான அச்சிடல் தொழில்நுட்பங்கள் காரணமாகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.
இந்தக் குறைபாடுகள் உற்பத்தித் திறனையும் செலவுப் போட்டித்தன்மையையும் பாதித்துள்ளதால், நிறுவனத்தை மறுசீரமைத்து நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, நவீன அச்சிடல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், நிறுவனத்தின் செயற்பாடுகளைப் பல்வகைப்படுத்துதல் மற்றும் உயர் பாதுகாப்பு அச்சிடல் வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு ‘Smart Print Initiative’ திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் நவீனமயப்படுத்தல் மற்றும் செயற்பாடுகளைப் பல்வகைப்படுத்தும் திட்டத்தைப் பொது – தனியார் பங்காளித்துவ முறையின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.








