நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், நுளம்புகள் உற்பத்தியாகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்றுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முறையான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மீண்டும் டெங்கு நோயின் தீவிரப் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
மழைக்காலங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வரலாற்று ரீதியாக அவதானிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையைத் தொடர்ந்து பேணுவதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட தீவிரமான டெங்கு பரவல் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்பு பெரிதும் உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இத்தகைய நிலைமை மீண்டும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, அனைவரும் ஒன்றிணைந்து டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அகற்றுவதற்குத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, வீடுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் தேங்கி நிற்கும் இடங்களைத் தொடர்ந்து பரிசோதித்து, அவற்றை அகற்றுவதுடன் மீண்டும் நீர் தேங்குவதைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








