கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் குழுவொன்று முன்னெடுத்துவரும் சத்தியாகிரகப் போராட்டம் இன்று (19) நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
கடந்த 16ஆம் திகதி பிற்பகல் விஹாரமஹாதேவி பூங்காவுக்கு வருகை தந்த பௌத்த பிக்குகள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அன்றைய தினம் அங்கு கூடாரம் அமைக்க முற்பட்டபோது, பொலிஸாருக்கும் பிக்குகளுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.
ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை குறித்த இடத்திலிருந்து வெளியேறப் போவதில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தை ஆரம்பித்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர், நீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த 16ஆம் திகதி அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனையடுத்து, புத்தசாசன அமைச்சுக்கு முன்பாகக் கூடிய அவர்கள், அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
எனினும், குறித்த கலந்துரையாடல் தோல்வியடைந்ததாகத் தெரிவித்த போராட்டக்காரர்கள், தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விஹாரமஹாதேவி பூங்காவில் தங்கியிருக்கப் போவதாக அறிவித்து சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.








