அமானா வங்கி தனது 49ஆவது சுய வங்கிச் சேவை நிலையத்தை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்றுப் பகுதியில் திறந்து வைத்துள்ளது.
ஏறாவூர் – மீச்சநகர், மீராக்கெர்னி வீதியில் அமைந்துள்ள இந்தப் புதிய நிலையத்தின் ஊடாக, ஏறாவூர் பற்று மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 24 மணிநேரமும் வங்கிச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை மீளப்பெறுதல், பணத்தை வைப்புச் செய்தல் மற்றும் காசோலைகளை வைப்புச் செய்தல் உள்ளிட்ட சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தத் திறப்புடன் கிழக்கு மாகாணத்தில் அமானா வங்கியின் சுய வங்கிச் சேவை நிலையங்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், மாகாணம் முழுவதும் அமைந்துள்ள வங்கியின் ஒன்பது முழுமையான கிளைகளுக்கு இந்த நிலையமும் துணையாக அமைகிறது.
திறப்பு விழாவில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம். முரளிதரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள், வர்த்தகப் பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் அப்பகுதி நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.
அமானா வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிராந்தியக் கிளைகளுக்கான உதவி உப தலைவர் அர்ஷத் அத்னான், தனிநபர் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேர்க்கை வழித்தடங்களின் தலைவர் மொஹமட் அஸ்மில், கிளைகளுக்கான வெளிக்களச் செயற்பாடுகளின் அதிகாரி இம்ரான் மொஹமட், ஏறாவூர் கிளை முகாமையாளர் பி.எம். மாஹிர் பதுர்தீன், கதுருவெல கிளை முகாமையாளர் ஜிஃப்ரி ராஸிக் உள்ளிட்ட வங்கி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய அமானா வங்கியின் பிராந்தியக் கிளைகளுக்கான உதவி உப தலைவர் அர்ஷத் அத்னான் தெரிவிக்கையில்,
“ஏறாவூர் பற்று பகுதியில் எமது 49ஆவது சுய வங்கிச் சேவை நிலையத்தைத் திறந்து வைத்திருப்பது, நாம் சேவையாற்றும் சமூகங்களுக்கு வசதியானதும் இலகுவாக அணுகக்கூடியதுமான வங்கிச் சேவைகளை மேலும் நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதில் மற்றுமொரு முக்கியமான படியாகும்.
இந்த வசதியின் ஊடாக, இப்பிராந்தியத்தில் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் மாறிவரும் வங்கித் தேவைகளுக்கு ஆதரவளிப்பதுடன், ஏறாவூர் பற்று மக்களுடனான எமது உறவை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
அமானா வங்கி தொடர்பில்
அமானா வங்கி பிஎல்சி, இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் வழங்கப்பட்டு, கொழும்புப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வங்கியாகும்.
சவூதி அரேபியாவின் ஜித்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (IsDB) குழுமம், அமானா வங்கியின் பிரதான பங்குதாரராக உள்ளது.
வட்டி சாராத வங்கியியல் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அமானா வங்கி, உலகின் வலுவான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ‘தி ஏசியன் பேங்கர்’ நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.










