அப்ரா அன்சார்
இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான WMSKF இந்தோ–இலங்கை திறந்த கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையின் பாணந்துறை, எலுவில பகுதியைச் சேர்ந்த 10 வயது மாணவன் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
எலுவில அல்வியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் ஃபஸ்மி அமீர் அம்ஜத் என்ற மாணவரே இச்சாதனையைப் படைத்துள்ளார்.
குறித்த போட்டியில் பங்கேற்ற அவர், கட்டா (Kata), குழு கட்டா (Team Kata) மற்றும் குமித்தே (Kumite) ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜீமான் ஷோட்டோகான் கராத்தே சங்கத்தின் கீழ் இயங்கும் திதா கராத்தே அகடமியில் பயிற்சி பெற்றுவரும் இம்மாணவர், ஷிஹான் லக்சிறி குமாரவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
சிறுவயதிலேயே சர்வதேசப் போட்டியில் பங்கேற்று மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ள இம்மாணவனின் சாதனை, அவரது பாடசாலைக்கும் பாணந்துறை எலுவில கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









