பிரபல புகைப்படச் சேவை நிறுவனமான Getty Images, அதிகரித்து வரும் கடன் சுமை மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாகியுள்ள போட்டி ஆகியவற்றை எதிர்கொள்வதற்காக, அமெரிக்காவின் திவால் சட்டத்தின் கீழான அத்தியாயம் 11 (Chapter 11) நடைமுறையின் ஊடாக கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, Getty குடும்பத்துடன் தொடர்புடைய நிறுவனங்களும் Koch Equity Development நிறுவனமும் இணைந்து Getty Images நிறுவனத்தைத் தனியார் நிறுவனமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.
இதற்காக 533 மில்லியன் அமெரிக்க டொலர் புதிய முதலீட்டை வழங்கவும், பாதுகாப்பற்ற கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களின் 270 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இரத்துச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Getty Images நிறுவனத்தின் மொத்தக் கடன், 2026 ஜூன் 30ஆம் திகதி நிலவரப்படி 2.1 பில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டது.
இதற்கிடையில், நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2026 ஒக்டோபர் 9ஆம் திகதி 20.74 மில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்திருந்தது.
2022ஆம் ஆண்டு சுமார் 4.8 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பீட்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதிலிருந்து, நிறுவனத்தின் பங்கு மதிப்பு 99 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும், கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் நியூயோர்க் பங்குச் சந்தையிலிருந்து நிறுவனத்தின் பங்குகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இருப்பினும், கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் காலப்பகுதியிலும் நிறுவனம் தனது வழக்கமான வணிகச் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும், அதன் விற்பனையாளர்களுக்கான கொடுப்பனவுகள் வழமைபோன்று மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உருவாக்கப்படும் படங்கள், பாரம்பரியப் புகைப்படச் சேவைகளுக்குப் போட்டியாக உருவெடுத்துள்ளன. இதனால் Getty Images போன்ற நிறுவனங்களின் வருமானம் மற்றும் வணிக எதிர்காலம் தொடர்பில் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.
ரொய்ட்டர்ஸ்







