பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டணங்கள் (Royalties) மற்றும் உரிமம் வழங்கும் நடைமுறைகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை இசை படைப்பாளர்கள் மற்றும் இசை வெளியீட்டாளர்கள் சங்கம் (ACPOSL) தீர்மானித்துள்ளது.
பாடல்களின் உரிமம் மற்றும் காப்புரிமைக் கட்டணம் செலுத்தும் முறைமை தொடர்பாக அண்மைக்காலமாக சமூகத்திலும் கலைத்துறையிலும் பாடகர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கு இடையே பல்வேறு விவாதங்களும் கருத்து வேறுபாடுகளும் நிலவி வந்தன.
இந்நிலையில், பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு மதிப்பளித்து, சங்கத்தின் பணிப்பாளர் சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் வரை இடைநிறுத்தம்
‘எமது காப்புரிமைக் கட்டண முறைமையை மீளாய்வு செய்கிறோம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள வருடாந்தப் பொதுக்கூட்டம் வரை உரிமம் வழங்கும் நடைமுறைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் எனச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் சங்கத்தின் சட்டப்பூர்வ நிலைக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மற்றும் யோசனைகளைக் கருத்திற்கொண்டு, முன்மொழியப்பட்ட உரிமக் கட்டமைப்பு மற்றும் கட்டண முறைகளை மறுபரிசீலனை செய்து திருத்தியமைக்கவும் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக, இசைத்துறையின் அனைத்துத் தரப்பினருடனும் முறையான தொடர் பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நடைமுறையைப் பின்பற்றி, அனைத்துத் தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் சட்டப்பூர்வமான கட்டமைப்பை உருவாக்குவதற்குத் தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், ஊடகவியலாளர் சந்திப்புகளின்போது தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்களால் ஏதேனும் தரப்பினருக்கு மனவருத்தம் அல்லது அசௌகரியம் ஏற்பட்டிருப்பின், அதற்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும் இலங்கை இசை படைப்பாளர்கள் மற்றும் இசை வெளியீட்டாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








