எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி, பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் இன்றைய வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் தெரிவித்த ஆணைக்குழு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்தத் தகவலை முன்வைத்துள்ளார்.








