நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் இதுவரை எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் மத்திய பிராந்தியத்திலுள்ள கோர்கா மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில், காத்மண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதியில் நிலவும் நிலைமை தொடர்பான புதிய தகவல்களை இலங்கையர்களுக்கு தூதரகம் தொடர்ச்சியாக அறிவித்து வருவதுடன், அப்பகுதிகளுக்கான பயணங்கள் தொடர்பிலும் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (11) அதிகாலை மீண்டும் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கினால் பலர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெள்ளப் பெருக்கினால் பிரதான நெடுஞ்சாலைகள், வீடுகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட பல உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.







