ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பிளேக் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய ஆய்வக ஊழியர் ஒருவர் நியூமோனியா காரணமாக உயிரிழந்தமைக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
எனினும், குறித்த பகுதியில் பிளேக் தொற்றால் பாதிக்கப்பட்ட எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த ஊழியர் தொடர்பில் ரஷ்ய அதிகாரிகள் நடத்திய பரிசோதனைகளில், அதிக ஆபத்துடைய நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், எவருக்கும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்களிடையே நோய் அறிகுறிகளும் தென்படவில்லை என்பதால், தொடர்ந்து தொற்று பரவுவதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2ஆம் திகதி திடீரென நோய்வாய்ப்பட்ட குறித்த ஆய்வக ஊழியர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர், காரணம் தெளிவாகக் கண்டறியப்படாத தீவிர நியூமோனியா மரணங்கள் தொடர்பில் உலகளாவிய சுகாதார அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே, உயிரிழந்த ஊழியர் உரிய தடுப்பூசிகளைப் பெற்றிருந்ததாகவும், அவர் பணியாற்றிய ஆய்வகத்துடன் தொடர்புடைய நுண்ணுயிர்கள் எதுவும் அவரது உடலில் கண்டறியப்படவில்லை என்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் உடல்நலப் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும், தேவையான தகவல்கள் அனைத்தும் உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த ஊழியரின் மரணத்திற்கான துல்லியமான காரணம் குறித்த இறுதி முடிவு இதுவரை வெளியாகவில்லை.








