கெஸ்பேவ – கொழும்பு வீதியின் மிரிஸ்வத்தை பகுதியில் மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில், ஹொரணை – கொழும்பு வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பஸ் சாரதி ஒருவர் பிலியந்தலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஹதுடுவையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மெட்ரோ பஸ்ஸின் பின்னால் வந்த குறித்த சொகுசு பஸ், கெஸ்பேவ சந்தியிலிருந்தே பிரதான முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறும், தொடர்ச்சியாக ஒலியெழுப்பியவாறும் பாதுகாப்பற்ற முறையில் முந்திச் செல்ல முயன்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, மிரிஸ்வத்தை பகுதியில் மெட்ரோ பஸ்ஸை முந்திச் சென்ற சொகுசு பஸ்ஸின் பின்பகுதியை, மெட்ரோ பஸ்ஸின் முன்புற வலது மூலையில் மோதச் செய்து விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் மெட்ரோ பஸ்ஸின் வலது பக்கக் கண்ணாடி உள்ளிட்ட இரண்டு கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளன.
விபத்தினால் பஸ்ஸுக்கு ஏற்பட்ட சேதத்தின் பெறுமதி 342,000 ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், விபத்து இடம்பெற்ற விதம் அருகிலிருந்த சிசிடிவி கெமராவிலும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஹொரணை – பொகுனுவிட்ட பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பிலியந்தலைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








