சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கான அனைத்து விமான சேவைகளையும் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
ரியாத் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள அண்மைய பாதுகாப்புச் சூழ்நிலை மற்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு மறுஆய்வுகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகள் மற்றும் விமானப் பணிக்குழுவினரின் பாதுகாப்பே தமது முதன்மையான முன்னுரிமை எனக் குறிப்பிட்டுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், தற்போதைய சூழ்நிலை வர்த்தக விமானச் சேவைகளை முன்னெடுப்பதற்குப் பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவித்துள்ளது.
விமான சேவைகள் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு, இலங்கையிலிருந்து 1979 என்ற இலக்கத்தையும், சர்வதேச அழைப்புகளுக்கு +94 11 777 1979 என்ற இலக்கத்தையும் தொடர்புகொள்ள முடியும்.
அத்துடன், WhatsApp செய்திகள் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு +94 74 444 1979 என்ற இலக்கத்தைப் பயன்படுத்த முடியும்.
பயணிகள் தமது பயண முகவர் ஊடாகவோ அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாகவோ மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.







