அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானையொன்று, செல்வா மைதானத்தின் வேலிகளை முற்றாக சேதப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி யானையை காட்டுப்பகுதிக்கு விரட்டியுள்ளனர். அவ்வாறு விரட்டப்பட்ட யானை, நற்பிட்டிமுனை கிட்டங்கி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அதிகாலை வேளையில் வீதியைக் கடக்க முற்பட்டுள்ளது.
இதன்போது, நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்புப் பகுதியில் இருந்து மத்திய முகாம் பகுதியை நோக்கி துவிச்சக்கர வண்டியில் தோட்டப் பணிக்காகச் சென்ற சிறுவன் மீது யானை எதிர்பாராதவிதமாக தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மற்றொரு காட்டு யானையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு, எந்தவித அசம்பாவிதமும் இன்றி மீண்டும் காட்டுப்பகுதிக்கு விரட்டியுள்ளனர்.
அறுவடைப் பருவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வயல்களில் எஞ்சியுள்ள வைக்கோலுக்கு தீ வைக்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், காற்று மாசுபடுவதுடன் மண்ணில் உள்ள நன்மை தரும் நுண்ணுயிரிகள் அழிந்து மண் வளம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக சூழலியலாளர்களும் விவசாய நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.
மேலும், புகையின் தாக்கம் மற்றும் காட்டுப்பகுதிகளில் ஏற்படும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக யானைகள் கிராமங்களை நோக்கி வருவதாகவும், இதனால் மனித-யானை மோதல்கள் அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலால் பொதுமக்களின் உயிர்கள் மற்றும் உடமைகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு யானை வேலிகளை அமைப்பதுடன், மனித-யானை மோதலுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








