அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணியாத சுமார் 3,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீட் பெல்ட் விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு தண்டனை வழங்குவது நோக்கமல்ல என்றும், சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் பிரதான நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகம் வரை வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவதால், திடீர் பிரேக் அல்லது விபத்து ஏற்படும் சந்தர்ப்பங்களில் சீட் பெல்ட் அணியாத பயணிகளுக்கு பாரிய காயங்கள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீட் பெல்ட் சட்டம் அமுல்படுத்தப்பட்ட மறுநாளே தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 11 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விபத்தில் சிக்கிய பயணிகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதுடன், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெறும் விபத்துக்களின் போது காயங்களின் தீவிரத்தை குறைப்பதில் சீட் பெல்ட் முக்கிய பங்கு வகிப்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக மாத்திரம் சீட் பெல்ட் அணியாமல், தங்களது உயிரைப் பாதுகாப்பதற்கான அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கையாக அதனை கருதி அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








