உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, பொருளாதார வசதியின்மையால் சொந்த வீடு அமைக்க முடியாமல் தவிக்கும் குடும்பங்களின் கனவை நனவாக்கும் நோக்கில் ‘சொந்தமாக இருக்க ஒரு இடம் – அழகான ஒரு வாழ்க்கை’ எனும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் 5,000 வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய மாகாணம், மாத்தளை மாவட்டம், கலேவெல பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட குடும்பமொன்றிற்கும் சொந்த வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளைக் கொண்ட குறித்த குடும்பம், மழைக்காலங்களில் வீட்டிற்குள் நீர் புகுதல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்துள்ளது.
பொருளாதார வசதியின்மை காரணமாக சொந்தமாக வீடு ஒன்றை அமைத்துக்கொள்வது அக்குடும்பத்திற்கு நீண்டகாலக் கனவாகவே இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், புதிய வீடு கிடைத்துள்ளதன் மூலம் பாதுகாப்பானதும் கௌரவமானதுமான வாழ்க்கையை நோக்கி அக்குடும்பம் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் அரச தகவல் திணைக்களம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வழிகாட்டுதலுடன், பிராந்திய இளம் ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படுவதாக ஊடகவியலாளர் சஸ்னா மூசீன் தெரிவித்துள்ளார்.
“ஒரு வீடு என்பது வெறும் கட்டிடம் அல்ல. அது ஒரு குடும்பத்தின் பாதுகாப்பும், நம்பிக்கையும், எதிர்காலத்திற்கான புதிய தொடக்கமும் ஆகும்” என ஊடகவியலாளர் சஸ்னா மூசீன் மேலும் தெரிவித்துள்ளார்.
(ஐ. ஏ. காதிர் கான்)











