( ஐ. ஏ. காதிர் கான் )
“இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக அவதூறு பரப்பினார்” என்ற குற்றச்சாட்டின் பேரில் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்ற இளைஞரை, அந்தத் தண்டனையிலிருந்து மீட்பதற்கான சட்டப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதற்காக, இலங்கையிலிருந்து விசேட சட்ட நிபுணர்கள் குழு ஒன்று நாளை (06 ஆம் திகதி) சவூதி அரேபியா நோக்கிப் பயணமாகவுள்ளது.
இந்த விசேட குழுவில் பாராளுமன்ற உறுப்பினரும், அனுபவம் வாய்ந்த ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபா தலைமை தாங்குகிறார். அவருடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஸாத் நவவி, மற்றுமொரு ஜனாதிபதி சட்டத்தரணியான ஹபீழ் பாரிஸ் மற்றும் சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சவூதி அரேபியாவின் நீதித்துறை நடைமுறைகள் மற்றும் அங்குள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, அனோஜனை எவ்வாறு விடுவிப்பது, மேன்முறையீடு செய்வது மற்றும் இராஜதந்திர ரீதியிலான தலையீடுகளை மேற்கொள்வது தொடர்பில், இந்தக் குழு சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில், இலங்கை அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும், வெளிவகார அமைச்சு ஊடாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், உயர்மட்ட வட்டாரங்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன.








