மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் காலங்களில் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை மேய்ச்சல் நிலத்திற்கு அழைத்துச் செல்வதாலும், அம்பாறை எல்லைப் பகுதியில் விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாலும் இருதரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக முரண்பாடுகள் நிலவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய வன வளப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் இணக்கப்பாட்டுடன் குறித்த பகுதியை மேய்ச்சல் நிலமாக வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எனினும், அந்த நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைவதற்கு முன்னர் மீண்டும் பெரும்போகப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பால் பண்ணையாளர்களுக்கான மேய்ச்சல் நிலமாக குறித்த பகுதியை உத்தியோகபூர்வமாக ஒதுக்குவதுடன், ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எதிர்காலத்தில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் அங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மகாவலி வலயத்தில் மாற்றுக் காணிகளை ஒதுக்கி வழங்குவதற்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சிலர் இந்தப் பிரச்சினையை இனவாத ரீதியில் கொண்டு செல்ல முயற்சிப்பதாகவும், நாட்டில் எந்தவொரு இனவாத மோதல்களுக்கோ வன்முறைகளுக்கோ அரசாங்கம் இனி ஒருபோதும் இடமளிக்காது எனவும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் தெரிவித்துள்ளார்.








