இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 தொடருக்காக பாகிஸ்தான் அணியின் புதிய தலைவராக சாஹிப்சாதா ஃபர்ஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் பாகிஸ்தான் டி20 அணியின் தலைமைப் பொறுப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. டி20 உலகக் கிண்ணத்தில் அணியை வழிநடத்திய சல்மான் அலி ஆகாவுக்குப் பதிலாக ஃபர்ஹான் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.
ஒக்டோபர் 9ஆம் திகதி ஆரம்பமாகும் இலங்கைக்கு எதிரான தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் சல்மான் அலி ஆகா இடம்பெறவில்லை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தில் 383 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராகத் திகழ்ந்த 30 வயதான ஃபர்ஹான், அண்மையில் நிறைவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வெள்ளிப் பதக்கம் வெல்ல வழிநடத்தியிருந்தார்.
வலதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஃபர்ஹானுடன், அப்துல் சமத், சைம் அயூப், ஹசன் நவாஸ், அரஃபாத் மின்ஹாஸ், மாஸ் சாதகத், அப்ரார் அகமத், சுஃபியான் மொகீம் மற்றும் மொஹமட் சல்மான் மிர்ஸா உள்ளிட்ட வீரர்களும் இலங்கை தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.
எனினும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னோட்டமாக இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள முக்கோணத் தொடருக்கான ஷஹீன் ஷா அப்ரிடி தலைமையிலான 16 பேர் கொண்ட ஒருநாள் அணியில் ஃபர்ஹான் இடம்பெறவில்லை.








