இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையான எட்டு மாத காலப்பகுதியில் நாட்டின் எரிபொருள் இறக்குமதிக்காக 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 61.6 சதவீத அதிகரிப்பாகும்.
2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக 2,520.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்தன.
அதற்கமைய, இவ்வாண்டின் குறித்த காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிச் செலவு கடந்த ஆண்டை விட 1,551.5 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.
இதனிடையே, 2026 ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக 450.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன், இது 2025 ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 76.5 சதவீத அதிகரிப்பாகும்.
2025 ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக 255.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்தன.
அதன்படி, 2026 ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவு கடந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 195.4 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.
மேலும், 2026 ஓகஸ்ட் மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட கனிம எண்ணெய் இறக்குமதிக்காக 321.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
2025 ஓகஸ்ட் மாதத்தில் இதற்காக 202.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்த நிலையில், சுத்திகரிக்கப்பட்ட கனிம எண்ணெய் இறக்குமதிச் செலவு ஆண்டுக்கு ஆண்டு 58.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.







