இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, இதுவரை நாட்டில் 100,871 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மரண விகிதம் 0.077 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
மொத்த நோயாளர்களில் 52.45 சதவீதமானோர், அதாவது 52,906 பேர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 21,377 ஆகும். கொழும்பில் 19,759 பேரும், கண்டியில் 7,689 பேரும், களுத்துறையில் 6,400 பேரும், மாத்தறையில் 6,305 பேரும் பதிவாகியுள்ளனர்.
மாதாந்த தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 151 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். செப்டெம்பர் மாதத்தில் 5,230 பேரும் பதிவாகியுள்ளனர்.
இவ்வருடத்தில் ஜூலை மாதத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,964 ஆகும். ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 பேரும் பதிவாகியுள்ளனர்.
தற்போது 37 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி ஆபத்தான வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனிடையே, நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து, சுற்றாடலைத் தூய்மையாக வைத்திருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.








