யெமனின் தாயிஸ் பகுதியில் அரசுப் படைகளுக்கும் ஹூதி படையினருக்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயிஸ் நகரின் தென்கிழக்கில் உள்ள சாமா மாவட்டத்தில், ஹூதி படையினருடனான கடும் மோதல்களுக்குப் பின்னர் சாமா கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக யெமன் அரசுப் படைகள் தெரிவித்துள்ளன.
பழங்குடியினரின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், மோதல்களில் ஹூதி படையினர் சிலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாகவும் அரசுப் படைகள் தெரிவித்துள்ளன.
மேலும், தாயிஸின் மேற்குப் பகுதியில் உள்ள ஜபல் ஹபஷி மாவட்டத்தில் ஜபல் அஸ்ஸான் பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அரசுப் படைகள் தெரிவித்துள்ளன.
அத்துடன், அல்-ஜவ்ஃப் மாகாணத்தின் ஷஹ்லா பகுதியில் ஹூதிகளின் நான்கு ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அரசுப் படைகள் கூறியுள்ளன.
இதனிடையே, இன்று சனா மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்கு அரசுப் படைகளின் பேச்சாளர் மஜித் அல்-நசீலி பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யெமனின் எந்தப் பகுதியிலும் ஹூதி படையினரைத் தாக்கும் திறன் தங்களிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாயிஸின் அல்-கதஹா மற்றும் கஹ்பூப் பகுதிகளிலும் கடந்த சில மணி நேரங்களாக மோதல்கள் இடம்பெற்று வருவதுடன், சில முனைகளில் கடும் மோதல்கள் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








