நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை ரூ.10 அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தனியார் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டீசல் விலை அதிகரிப்பால் ஏற்படும் நஷ்டத்தை தமது தரப்பினரே ஏற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, குறுகிய தூர பேருந்து சேவையொன்றுக்கு நாளாந்தம் சுமார் ரூ.250 வரையிலும், நீண்ட தூர சேவைக்கு சுமார் ரூ.1,000 வரையிலும் நஷ்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியத்திற்காக பெருமளவு நிதியை ஒதுக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், டீசல் விலையை ரூ.10 அதிகரிப்பதற்கு பதிலாக அந்த விலை அதிகரிப்பை தவிர்த்திருக்கலாம் எனவும் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் தனியார் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க தமது சங்கம் தயாராக இல்லை என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.








