சியம்பலாங்கமுவ பகுதியில் பொறி துப்பாக்கியில் சிக்கி முன் வலது காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயமடைந்த ‘கவன்திஸ்ஸ’ என அழைக்கப்படும் தந்த யானை, தொடர்ந்து வழங்கப்பட்ட சிகிச்சையின் பின்னர் குறிப்பிடத்தக்க அளவு குணமடைந்து, சுமார் 15 காட்டு யானைகள் கொண்ட கூட்டத்துடன் இணைந்துள்ளது.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் தகவலின்படி, கவன்திஸ்ஸவுக்கு பல நாட்களாக நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் உள்ளிட்ட தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் காயமடைந்த காலில் ஏற்பட்ட வீக்கமும் காயமும் குறைந்துள்ளன.
மிஹலேவ வனவிலங்கு பிரிவு அதிகாரி உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவொன்று கவன்திஸ்ஸவின் நடமாட்டம் மற்றும் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
சந்தன ஜயசிங்க, ஆனந்த தர்மகீர்த்தி, அகலங்க பினிடிய, இசுரு ஹேவகொட்டகே மற்றும் புபுது அதஸ்சூரிய ஆகிய கால்நடை வைத்தியர்களைக் கொண்ட குழுவினரால் சிகிச்சை முன்னெடுக்கப்படுகிறது.
கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி அதிகாலை 4 மணியளவிலும், செப்டெம்பர் 30ஆம் திகதி இரவு 10.30 மணியளவிலும் அதிகாரிகள் கவன்திஸ்ஸவை அண்மித்து அவதானித்தபோது, அது நல்ல உடல்நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சிகிச்சையின் போது மயக்கமடையச் செய்வதற்காக மீண்டும் மீண்டும் வலியூட்டும் ஊசிகள் செலுத்தப்பட்டதால் ஏற்பட்ட எதிர்வினையாக, ஒரு சந்தர்ப்பத்தில் கவன்திஸ்ஸ வனவிலங்கு அதிகாரிகள் குழுவைத் துரத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அதிகாரி ஒருவர் தப்பிச் செல்ல முயன்றபோது கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கவன்திஸ்ஸவை புகைப்படம் எடுப்பதற்காக அதனை அணுகுவதையோ அல்லது நீர்த்தேக்கங்களைச் சுற்றி கூடுவதையோ தவிர்க்குமாறு புகைப்படக் கலைஞர்கள், சமூக ஊடக உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் பொதுமக்களிடம் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.
கவன்திஸ்ஸவும் அதனுடன் உள்ள யானைக் கூட்டமும் மாலை நேரங்களில் நீரருந்துவதற்காக அப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், யானைகளைப் பார்வையிட மக்கள் கூட்டமாகச் செல்வதால் அவை அச்சமடைந்து, நீர்த்தேக்கங்களுக்குள் செல்லாமல் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி நகர்வதாக பிரதேச மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனவே, கவன்திஸ்ஸவின் சிகிச்சை மற்றும் மீட்புப் பணிகளை தடையின்றி முன்னெடுப்பதற்கும், யானைக் கூட்டத்தின் இயல்பான நடமாட்டத்தைப் பாதுகாப்பதற்கும் போதிய இடைவெளியை வழங்குமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.








