கொழும்பு: இலங்கை சுங்கச் சேவையை நவீனமயமாக்கும் முக்கிய நடவடிக்கையாக, புதிய காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை இன்று (01) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
இலங்கை சுங்கக் கேட்போர் கூடத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெறுகிறது.
ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் பிரிவு மற்றும் இலங்கை சுங்கம் ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய முறைமையின் மூலம், சுங்க அனுமதி நடவடிக்கைகள் வேகமாகவும், திறம்படவும், வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று முதல் அனைத்து இறக்குமதியாளர்களும் தங்களது சுங்க ஆவணங்களை செல்லுபடியாகும் டிஜிட்டல் கையொப்பத்துடன் (Digital Signature) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாரம்பரிய காகித வடிவிலான ஆவணங்களை ஏற்றுக்கொள்ளும் நடைமுறை இன்று முதல் முழுமையாக நிறுத்தப்படுகிறது.
டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பின்னர் ஆவணங்களில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றத்தையும் புதிய முறைமை உடனடியாகக் கண்டறியக்கூடியதாக இருப்பதால், முறைகேடுகள் மற்றும் ஊழலுக்கான வாய்ப்புகள் கணிசமாகக் குறையும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.








