ஜப்பானின் நிஷின் நகரில் இன்று (1) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில், இலங்கை அணியை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணி சார்பில் இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களையும், வைபவ் சூரியவன்ஷி 38 ஓட்டங்களையும் பெற்றனர்.இலங்கை அணி சார்பில் சஹான் ஆரச்சிகே மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 9.5 ஓவர்களில் 45 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் நுவனிது பெர்னாண்டோ அதிகபட்சமாக 15 ஓட்டங்களைப் பெற்றார். சினேத் ஜயவர்தன, லசித் க்ரூஸ்புள்ளே, சொஹான் டி லிவேரா உள்ளிட்ட ஐந்து வீரர்கள் ஓட்டமேதும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் பட்டேல் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்மூலம் இந்திய அணி 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.








