அப்ரா அன்சார்
கொழும்பு: யெமனில் மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், முக்கிய வீதிகள் மூடப்பட்டு துறைமுகங்களின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைஸ் மாகாணத்தின் ஜபல் ஹபாஷி உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்று வரும் மோதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி, இடம்பெயர்வு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
செப்டெம்பர் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தகவலின்படி, அண்மைய மோதல்களால் 2.3 இலட்சத்துக்கும் அதிகமானோர் உள்நாட்டில் இடம்பெயரக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே யெமனில் 52 இலட்சத்துக்கும் அதிகமானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள நிலையில், புதிய இடப்பெயர்வு மனிதாபிமான அமைப்புகள் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோதல்கள் காரணமாக முக்கிய வீதிகள் மூடப்பட்டுள்ளதால், உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் தங்குமிடப் பொருட்களை இடம்பெயர்ந்த மக்களிடம் கொண்டு செல்வது கடினமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைஸ் நகரை சென்றடைவதற்கான மாற்று மலைப்பாதைகள் ஆபத்தானதாகவும் நீண்ட பயணத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, செங்கடல் பகுதியில் இடம்பெறும் மோதல்கள் மற்றும் மொகா நகரம் மற்றும் துறைமுகத்தின் கட்டுப்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக யெமனுக்கான வர்த்தகக் கப்பல்களின் வருகையும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யெமன் தனது உணவுத் தேவைகளில் சுமார் 90 சதவீதத்தை இறக்குமதியை நம்பியுள்ள நிலையில், இறக்குமதி மற்றும் மனிதாபிமான உதவிகள் குறைவது உணவுப் பொருட்களின் கிடைப்பிலும் விலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் கோதுமை மற்றும் மாவு இறக்குமதி முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 48 சதவீதம் குறைந்துள்ளது. எரிபொருள் இறக்குமதியும் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 67 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யெமனில் 2.2 கோடிக்கும் அதிகமானோர், அதாவது நாட்டின் சுமார் அரைவாசி மக்கள் தொகையினர், அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் உள்ளதாக சர்வதேச குடியேற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
மோதல்கள் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் இடம்பெயர்வு நெருக்கடியும் மனிதாபிமான தேவைகளும் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மூலம்: அல்ஜசீரா











