அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் சுமார் 7,000 மருத்துவர்களை சுகாதார சேவையில் புதிதாக இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரச வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள், ஓய்வுபெற்ற மற்றும் உயிரிழந்த அதிகாரிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை ஆராய்ந்து இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (15) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், சுகாதார சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரை பணியாளர் கட்டமைப்பில் (Cadre) எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
பல வைத்தியசாலைகளில் புதிய பிரிவுகள் நிறுவப்பட்டு, வைத்தியசாலைகளின் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்ட போதிலும், முறையான பணியாளர் கட்டமைப்பு இல்லாத காரணத்தால் புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதில் தடைகள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், கடந்த சில மாதங்களாக விஞ்ஞானபூர்வமான முறையில் பணியாளர் கட்டமைப்பை ஆய்வு செய்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான அனைத்து தகவல்களும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் 2027, 2028 மற்றும் 2029ஆம் ஆண்டுகளுக்கான சுகாதாரத்துறையின் ஊழியர் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் 25 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் மருத்துவ பீடங்கள் காணப்படுகின்றன.
அவற்றில் தற்போது சுமார் 12,000 மாணவர்கள் மருத்துவப் பட்டப்படிப்பைத் தொடர்கின்றனர்.
இந்நிலையில், நாட்டில் தற்போது சேவையாற்றும் பொது மருத்துவர்கள், விசேட மருத்துவர்கள் மற்றும் நிர்வாக மருத்துவர்கள் உள்ளிட்டோரின் மொத்த எண்ணிக்கை சுமார் 25,000 ஆகக் காணப்படுகின்றது. இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், மேலும் 12,000 மாணவர்கள் மருத்துவக் கல்வியைத் தொடர்வது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மருத்துவப் பட்டப்படிப்பை நிறைவு செய்து உள்ளகப் பயிற்சியைப் பூர்த்தி செய்யும் பெரும்பாலான மருத்துவப் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏனையவர்கள் தனியார் துறையில் சேவையாற்றவோ அல்லது வெளிநாடுகளுக்குச் செல்லவோ வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், 2017ஆம் ஆண்டின் பழைய பணியாளர் கட்டமைப்பு வரையறைகள் காரணமாக உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த மருத்துவர்களுக்கு முதல் நியமனங்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதங்கள், புதிய பணியாளர் கட்டமைப்பு முறைமையின் ஊடாக எதிர்காலத்தில் தீர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.







