மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது, நாட்டின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எஸ்ஸஹ்ரா எல் மன்சூரியை நியமித்துள்ளார்.
50 வயதான எல் மன்சூரி, நகர திட்டமிடல் அமைச்சராகவும் மராகெஷ் நகர மேயராகவும் பதவி வகித்து வந்தார். புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
“எமது நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளார். இது எனக்கு மட்டுமல்ல, அனைத்து மொராக்கோ பெண்களுக்கும் பெருமைக்குரிய விடயம்” என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் எல் மன்சூரி சார்ந்த Authenticity and Modernity Party (PAM) 395 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழவையில் 97 ஆசனங்களை வென்றது.
எனினும், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 198 ஆசனங்களை அக்கட்சி பெறாததால், ஆட்சி அமைக்க கூட்டணி உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரபு உலகில் பிரதமர் பதவி வகிக்கும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும் எல் மன்சூரி பெறுகிறார். இதற்கு முன்னர் துனிசியாவின் நஜ்லா பௌடன் 2021 முதல் 2023 வரை பிரதமராக பதவி வகித்திருந்தார்.
மராகெஷில் 1976ஆம் ஆண்டு பிறந்த எல் மன்சூரி, பிரான்ஸின் மொன்பெலியே பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றுள்ளார்.
2009ஆம் ஆண்டு மராகெஷ் நகர மேயராக தெரிவாகி, அந்த நகரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையைப் பெற்றார். 2021ஆம் ஆண்டு தேசிய அரசாங்கத்தில் நகர்ப்புற திட்டமிடல், வீடமைப்பு மற்றும் நகரக் கொள்கை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அவரது புதிய அரசாங்கம், 2030 FIFA உலகக் கிண்ணத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள பில்லியன் கணக்கான டொலர் முதலீடுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்களை கையாளவுள்ளது.
(Al Jazeera)








