புறக்கோட்டை பகுதியில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய விசேட சோதனையின்போது 801 போத்தல்கள் வழக்குப்பொருட்களாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனைகள் மற்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீரைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களுக்கு SLS 1616 தரநிலை பொருந்தும்.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இவ்வகை போத்தல்களில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் SLS உற்பத்திச் சான்றிதழ் இலச்சினை காணப்பட வேண்டும்.
அதேபோன்று, இறக்குமதி செய்யப்படும் போத்தல்கள் SLSI இறக்குமதி பரிசோதனை முறைமையின் கீழ் பரிசோதிக்கப்பட்டு விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
எனவே, இவ்வாறான போத்தல்களைக் கொள்வனவு செய்யும்போது உரிய தரநிலைகள் மற்றும் சட்டத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான தகவல்களை 1977 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்க முடியும்.








