முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதுதொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னதாக நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
இந்நிலையில், சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக வழக்கை இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, வழக்கு இறுதியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது உத்தரவிட்டிருந்தார்.








