அப்ரா அன்சார்
கொழும்பு; அமெரிக்காவில் இந்தியர்கள், பங்களாதேஷியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு இணையத்தில் கணிசமாக அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
Center for the Study of Organized Hate (CSOH) வெளியிட்ட “The Rising Tide of Anti-South Asian Hate in the United States” என்ற அறிக்கையின்படி, சமூக ஊடகத் தளமான X-இல் அமெரிக்காவில் வாழும் தெற்காசியர்களுக்கு எதிரான வெறுப்புப் பதிவுகளின் மாதாந்த எண்ணிக்கை 2024 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை 240 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன்படி, மாதாந்த பதிவுகளின் எண்ணிக்கை 12,904 இலிருந்து 43,843 ஆக உயர்ந்துள்ளது.
2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரையான காலப்பகுதியில் மட்டும் தெற்காசியர்களுக்கு எதிரான 542,000-க்கும் அதிகமான வெறுப்புப் பதிவுகளை X தளத்தில் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
அந்தக் காலப்பகுதியின் இறுதியில் பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் வெறுப்புப் பேச்சு தொடர்பான வரையறையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக CSOH தெரிவித்துள்ளது.
தெற்காசியர்களுக்கு எதிராக மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் அவதூறுச் சொற்கள் மற்றும் கருத்துருக்களை ஆய்வாளர்கள் கண்காணித்ததுடன், வெறுப்புப் பேச்சுக்கான ஐ.நா. வரையறைக்குள் வராத விமர்சனப் பதிவுகளையும் தனியே பிரித்துள்ளனர்.
X தளத்தில் பதிவான வெறுப்புப் பதிவுகளில் கிட்டத்தட்ட பாதி, தெற்காசியர்கள் அமெரிக்காவை “ஆக்கிரமிக்கின்றனர்”, வேலைவாய்ப்புகளைப் பறிக்கின்றனர் அல்லது நாட்டின் மக்கள்தொகை அமைப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், “pajeet” என்ற இழிவான சொல் மற்றும் அதன் மாறுபாடுகள் X தளத்தில் பதிவான வெறுப்புப் பதிவுகளில் 30 சதவீதத்திலும், மாற்று சமூக ஊடகத் தளங்களில் 45 சதவீதத்திலும் இடம்பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தெற்காசியர்களை அழுக்கானவர்கள் அல்லது சுகாதாரமற்றவர்கள் என சித்தரிக்கும் பதிவுகளும் X தளத்தில் 171 சதவீதம் அதிகரித்துள்ளன. ஆய்வில் கண்காணிக்கப்பட்ட கருத்துருக்களில் இதுவே வேகமாக அதிகரித்த கருத்துருவாக இருந்ததாக அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் மற்றும் பங்களாதேஷியர்களை ஒரே குழுவாகக் கருதுவதுடன், இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு இன மற்றும் மதக் குழுக்களையும் ஒரே மாதிரியான சமூகமாக சித்தரிக்கும் போக்கு இணையவழி வெறுப்புப் பதிவுகளில் காணப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏன் தற்போது இந்த அதிகரிப்பு?
அமெரிக்காவில் தெற்காசியர்களுக்கு எதிரான இனவாதம் நீண்டகால வரலாற்றைக் கொண்டிருந்தாலும், தற்போதைய அதிகரிப்புக்கு நீண்டகால பாரபட்சங்களுடன் புதிய அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களும் இணைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க நிறுவனங்களுக்கு திறமையான வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்த அனுமதிக்கும் H-1B விசா திட்டம் முக்கிய சர்ச்சைப் புள்ளியாக மாறியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
H-1B விசா பெறுவோரில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்தியர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 செப்டெம்பரில், குறிப்பிட்ட புதிய H-1B விண்ணப்பங்களுக்கு 100,000 அமெரிக்க டொலர் கட்டணம் விதிக்கப்பட்டது உள்ளிட்ட அரசியல் சர்ச்சைகளின் போது, தெற்காசியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு இணையத்தில் அதிகரித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அமெரிக்க நிர்வாகத்தின் அரசியல் பேச்சுக்களும் இந்தப் போக்குடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.
2025 ஜூலையில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலைகளை இந்தியாவுக்கு வெளிநாடுகளுக்கு மாற்றுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்ததைத் தொடர்ந்து, தெற்காசியர்களுக்கு எதிரான இணையவழி கருத்துக்கள் கணிசமாக அதிகரித்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2026 செப்டெம்பரில் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட ஒரு சமூக ஊடகப் பதிவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“Transformers: Age of Deportations” என்ற தலைப்பில் வெளியான அந்தப் பதிவில் “Mr Singh” என அடையாளப்படுத்தப்பட்ட சீக்கியர் ஒருவர் இடம்பெற்றிருந்ததுடன், “எங்கள் சாலைகளை விட்டு வெளியேறுங்கள்” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கு சில நாட்களுக்குப் பின்னர், டெக்சாஸ் குடியரசுக் கட்சி அரசியல்வாதி போ பிரெஞ்ச், டெக்சாஸ் பல்கலைக்கழக கால்பந்து போட்டியில் தெற்காசியர்கள் கலந்து கொண்டது குறித்து விமர்சித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க கல்வித் துறை “Make College Football Great Again” என்ற பதிவை வெளியிட்டதாக அறிக்கை கூறுகிறது.
இவ்வாறான அரசியல் பேச்சுக்கள் தெற்காசியர்கள் அமெரிக்க சமூகத்தில் உண்மையாகச் சேர்ந்தவர்கள் அல்ல என்ற கருத்தை வலுப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
‘மாதிரி சிறுபான்மை’ என்ற பிம்பத்திலிருந்து வேலைவாய்ப்பைப் பறிப்பவர்கள் என்ற குற்றச்சாட்டு வரை
பொருளாதாரம் தொடர்பான அதிருப்தியும் மற்றொரு காரணியாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு காலத்தில் இந்திய அமெரிக்கர்கள் “model minority” என ஒரே மாதிரியான வெற்றிகரமான சிறுபான்மை சமூகமாக சித்தரிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் “வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்பவர்கள்” மற்றும் “ஏமாற்றுபவர்கள்” என சித்தரிக்கப்படுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான அதிருப்திக்கு தெற்காசியர்கள் பல சந்தர்ப்பங்களில் பலிகடாவாக மாற்றப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, அமெரிக்க அரசியலில் தெற்காசிய சமூகத்தின் பிரதிநிதித்துவமும் அதிகரித்துள்ளது.
முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், நியூயோர்க் மேயர் சோஹ்ரான் மம்தானி, துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் மற்றும் அரசியல்வாதி விவேக் ராமசுவாமி உள்ளிட்டோர் இதற்கு உதாரணங்களாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அரசியல் கட்சி வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு தெற்காசிய அரசியல் பிரமுகர்கள் இனவாத தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
குறிப்பாக, சோஹ்ரான் மம்தானியின் தேர்தல் வெற்றிகளைத் தொடர்ந்து தெற்காசியர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பதிவுகள் அதிகரித்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தெற்காசியர்களுக்கு எதிரான வெறுப்பு, பெரும்பான்மை சமூகத்தினரிடையே சமூக அந்தஸ்து குறித்த அச்சங்களுடனும் தொடர்புபட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் போக்கு, மேற்கத்திய நாடுகளில் வெள்ளையின மக்களை திட்டமிட்ட முறையில் பிற மக்கள் மாற்றுகின்றனர் என்ற “Great Replacement Theory” எனப்படும் சதி கோட்பாட்டுடனும் தொடர்புபடுத்தப்படுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பங்கு
சமூக ஊடகங்கள் இந்தக் கருத்துக்களை இலக்கு வைத்து தொந்தரவு செய்வதற்கான வழியாக மாற்றியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
H-1B விசா திட்டத்தைப் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளைப் பெற்றதாக அல்லது விசா மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தெற்காசியர்களின் தனிப்பட்ட தகவல்களை சில X கணக்குகள் வெளியிட்டதாக அறிக்கை கூறுகிறது.
“Doxxing” எனப்படும் இந்த நடைமுறையில், ஒருவரின் வீட்டு முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் பகிரப்படுகின்றன.
மேலும், சில சமூக ஊடகப் பிரபலங்கள் தெற்காசியர்களின் வீடுகள் மற்றும் பணியிடங்களுக்குச் சென்று அவர்களை எதிர்கொண்டு, அந்தச் சம்பவங்களை இணையத்தில் பதிவேற்றியதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
வலதுசாரி சமூக ஊடகப் பிரபலமான சாரா கோன்சலஸ், H-1B திட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டிய தெற்காசியர் ஒருவரைத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் காணொளியை தனது அரை மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களுடன் பகிர்ந்ததாக அறிக்கை குறிப்பிடுகிறது.
உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் இத்தகைய உள்ளடக்கங்களை உருவாக்குவதை மேலும் எளிதாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தெற்காசியர்களை “அழுக்கானவர்கள், சுகாதாரமற்றவர்கள், பாலியல் ரீதியாக ஆபத்தானவர்கள், கலாசார ரீதியாக பின்தங்கியவர்கள் அல்லது மக்கள்தொகை அச்சுறுத்தல்” என சித்தரிக்கும் உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இணையவழி வெறுப்புப் பேச்சு, இணையத்திற்கு வெளியிலான வெறுப்புச் சம்பவங்களிலிருந்து தனித்து இருப்பதில்லை என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
ஜூலை மாதம் உட்டா மாநிலத்தில் இந்திய முஸ்லிம் ஒருவர் பணியாற்றிய வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம், வெறுப்புக் குற்றமாக அமெரிக்க மத்திய அரசின் வழக்கறிஞர்களால் குற்றஞ்சாட்டப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.
அதேபோல், செப்டெம்பரில் வயோமிங் மாநிலத்தில் சீக்கிய லொறி சாரதி ஒருவர் 17 முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
“இணையவழி மற்றும் நேரடியாக இடம்பெறும் வெறுப்புச் சம்பவங்கள் ஒன்றையொன்று வலுப்படுத்தக்கூடும். கருத்துருக்கள், ஒரே மாதிரியான சித்தரிப்புகள் மற்றும் அவதூறு ஆகியவை டிஜிட்டல் தளங்கள், அரசியல் பேச்சுக்கள், ஊடகங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றுக்கு இடையே பரவுகின்றன” என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம்: Al Jazeera








