பிரான்சின் வலதுசாரி தேசிய பேரணி (Rassemblement National – RN) கட்சியின் தலைவர் ஜோர்டான் பர்தெல்லா, தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யூத எதிர்ப்பு குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
Mediapart ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் பர்தெல்லா யூத எதிர்ப்பு கருத்துக்களைக் கொண்ட தனிப்பட்ட செய்திகளை அனுப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த பர்தெல்லா, தாம் சிறுவனாக இருந்த காலத்தில் தெரிவித்ததாகக் கூறப்படும் “யூத எதிர்ப்பு மற்றும் குழப்பமான கருத்துக்கள்” தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய பேரணி கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை “சீர்குலைக்கும்” நோக்கில் சில ஊடகங்கள் அவதூறு பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தனது சட்டத்தரணிக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் 31 வயதான பர்தெல்லா தெரிவித்துள்ளார்.
எனினும், 2013 முதல் 2015 வரையான காலப்பகுதியில் பர்தெல்லா அனுப்பியதாகக் கூறப்படும் டஜன் கணக்கான தனிப்பட்ட செய்திகளை ஆய்வு செய்துள்ளதாக Mediapart தெரிவித்துள்ளது. அவற்றில் தொடர்ச்சியான யூத எதிர்ப்பு கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தனிப்பட்ட செய்திகளை சுயாதீனமாக உறுதிப்படுத்தியுள்ளதாகவும், முன்னாள் கட்சி உறுப்பினர்களின் சாட்சியங்களையும் பயன்படுத்தியுள்ளதாகவும் Mediapart தெரிவித்துள்ளது.
இதனிடையே, பர்தெல்லா, அரசியலில் ஈடுபடத் தொடங்கிய காலத்திலிருந்தே யூத எதிர்ப்புக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் எந்தவித குழப்பமும் இருந்ததில்லை என தெரிவித்துள்ளார். மேலும், 2025ஆம் ஆண்டு இஸ்ரேல் அரசாங்கத்தால் தான் வரவேற்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பேரணி கட்சி, முன்னர் “தேசிய முன்னணி” (National Front) என அழைக்கப்பட்ட காலத்தில் உருவான இனவாத மற்றும் யூத எதிர்ப்பு வரலாற்றிலிருந்து விலகும் முயற்சியில், பர்தெல்லா தலைமையில் தனது அரசியல் தோற்றத்தை மாற்றி வருகிறது. மரின் லு பென்னின் தந்தை ஜீன்-மரி லு பென்னால் நிறுவப்பட்ட இந்தக் கட்சி, 2018ஆம் ஆண்டு தனது பெயரை தேசிய பேரணி என மாற்றியது.
2024ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சி வேட்பாளர்கள் சிலர் தெரிவித்த யூத எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் இனவாத கருத்துக்கள் கட்சியின் தேர்தல் வாய்ப்புகளை பாதித்ததாக செய்திகள் வெளியாகின.
அப்போது, சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கொண்ட வேட்பாளர்களை கட்சியிலிருந்து நீக்கி, இதுபோன்ற “தவறான வேட்பாளர் தெரிவுகளை” தவிர்ப்பதாக பர்தெல்லா உறுதியளித்திருந்தார்.
இதேவேளை, மரின் லு பென், Mediapart வெளியிட்டுள்ள அறிக்கை “போலி, திட்டமிட்ட சதி அல்லது கீழ்த்தரமான தந்திரமாக மட்டுமே இருக்க முடியும்” என தெரிவித்துள்ளார். பர்தெல்லா விரைவில் அவதூறு வழக்குத் தொடருவார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
லு பென்னும் தேசிய பேரணி கட்சியின் இனவாத பிம்பத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதுடன், இஸ்ரேலுடனான நெருக்கமான உறவுகளை உருவாக்குவதையும் வலியுறுத்தி வருகிறார்.








