கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மின் கேபிள்கள், செப்பு கம்பிகள் மற்றும் வீதி மின்விளக்குக் கம்பங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் திருடப்பட்ட 100 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021, 2022 மற்றும் 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 11 திருட்டுச் சம்பவங்களின் பெறுமதி 580 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ள போதிலும், ஏனைய 89 திருட்டுச் சம்பவங்களின் பெறுமதி கண்டறியப்படவில்லை என கணக்காய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
அதிவேக நெடுஞ்சாலையின் மின் கேபிள் அமைப்பை வடிவமைக்கும் போது, நடுப்பகுதியில் அமைக்கப்பட்ட மின் கேபிள்கள் முழுமையான கொங்கிரீட் பாதுகாப்பின்றி, சுமார் 3 அடி விட்டம் கொண்ட அரைவட்ட வடிவ ஹியூம் குழாய்களால் பகுதியளவில் மட்டுமே மூடப்பட்டிருந்தமை கள ஆய்வின்போது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக மின் கேபிள்களை இலகுவாக வெட்டி அகற்றக்கூடிய நிலை காணப்பட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு முதல் திருட்டுச் சம்பவம் பதிவான போதிலும், அதனைத் தடுப்பதற்கான உரிய பாதுகாப்பு முறை அறிமுகப்படுத்தப்படவில்லை.
மேலும், பொறுப்பு வாய்ந்த மேற்பார்வை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதமையால் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளதாக கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அத்துடன், அதிவேக நெடுஞ்சாலையின் முதல் 10 கிலோமீற்றர் பகுதிக்காக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில், முழு நெடுஞ்சாலையிலும் ஏற்பட்டுள்ள சேதங்களை நிவர்த்தி செய்வதற்கு 1,770 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவாகும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், திருட்டுகள் மற்றும் சேதங்களுக்கு பொறுப்பான நபர்களை அடையாளம் கண்டு, போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கை மேலும் வெளிப்படுத்தியுள்ளது.








