தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், ஜனாதிபதியின் தலைமையில் தொழில்முறை பொலிஸ் சேவையையும் தொழில்முறை பொலிஸ் அதிகாரிகளையும் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
85ஆவது பொலிஸ் தடகள விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வரும் ஆண்டில் பொலிஸ் சேவைக்கு மேலும் 10,000 அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த அனைத்து பதவி உயர்வுகளும் சிரேஷ்டத்துவம், பணித்திறன், திறமைக்கான எல்லைக்கோடுகள் மற்றும் பரீட்சை முறைகளின் அடிப்படையில் இந்த ஆண்டிற்குள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொலிஸ் அதிகாரிகளுக்கான முறையான இடமாற்ற முறையொன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் எதிர்காலத்தில் அதிகாரிகள் தங்களது வீட்டிற்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு இடமாற்றம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,000 பொலிஸ் அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் தராதரம் பாராது கீழ்நிலை முதல் உயர்நிலை வரையிலான அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்குவதற்கான வழிமுறை தயாரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கான அர்ப்பணிப்பைக் கருத்திற்கொண்டு, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சிறப்பு அபாயக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனுடன், எதிர்காலத்தில் பொலிஸ் சேவைக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏனைய உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
பொலிஸ் சேவையின் தரமான வளர்ச்சிக்கு ஏற்ப, பொலிஸ் சீருடையை புதிய தோற்றத்தில் வடிவமைப்பதற்கான திட்டங்களும் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.








