அப்ரா அன்சார்
மொராக்கோவின் நாடாளுமன்றத் தேர்தலில் Authenticity and Modernity Party (PAM) அதிக ஆசனங்களைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது.
மன்னராட்சிக்கு ஆதரவான PAM கட்சி, 395 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழவையில் 97 ஆசனங்களைப் பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்த இறுதி முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொராக்கோ அரசியலமைப்பின் படி, அதிக ஆசனங்களைப் பெறும் கட்சியைச் சேர்ந்த ஒருவரையே மன்னர் ஆறாம் முகமது பிரதமராக நியமிக்க வேண்டும். எனினும், ஆட்சியமைக்கத் தேவையான 198 ஆசனங்கள் PAM கட்சிக்கு கிடைக்காததால், ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு மன்னரின் நண்பரான Fouad Ali El Himma என்பவரால் PAM கட்சி நிறுவப்பட்டது. கடந்த ஒரு தசாப்த காலமாக அரசாங்கத்தை வழிநடத்திய மிதவாத இஸ்லாமிய கட்சியான Justice and Development Party (PJD), 2021ஆம் ஆண்டு 13 ஆசனங்களாக சரிந்திருந்த நிலையில், இம்முறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்று 54 ஆசனங்களை வென்றுள்ளது.
PAM உடனான நீண்டகால அரசியல் போட்டி காரணமாக PJD, அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. PJD எதிர்க்கட்சியில் தொடரவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், PAM மூன்றாவது இடத்தைப் பெற்ற மன்னராட்சிக்கு ஆதரவான Istiqlal கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க எதிர்பார்க்கப்படுகிறது.
PAM-ன் முக்கிய கூட்டணிக் கட்சியான National Rally of Independents (RNI) கட்சியின் ஆசன எண்ணிக்கையும் 102 இலிருந்து 66 ஆகக் குறைந்துள்ளது.
மொராக்கோவில் பதிவு செய்யப்பட்ட 15.8 மில்லியன் வாக்காளர்களில் 38 சதவீதம் பேர் மட்டுமே இம்முறை வாக்களித்துள்ளனர். மன்னர் ஆறாம் முகமது 1999ஆம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் பதிவான இரண்டாவது குறைந்த வாக்குப்பதிவு இதுவாகும். 2007ஆம் ஆண்டு 37 சதவீத வாக்குப்பதிவே மிகக் குறைந்த அளவாக இருந்தது. 2021ஆம் ஆண்டு சுமார் 51 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு இம்முறை கணிசமாகக் குறைந்துள்ளது.
வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து கடந்த ஆண்டு இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் மற்றும் ஜூலை மாதம் ஸ்பெயினின் Ceuta பகுதிக்குள் செல்ல முயன்ற குடியேற்றவாசிகளின் உயிரிழப்புகள் உள்ளிட்ட சம்பவங்களால் பொதுமக்களின் அரசியல் ஈடுபாடு குறைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
PAM கட்சியைச் சேர்ந்த Fouzi Lekjaa மற்றும் Fatima Ezzahra Mansouri ஆகியோர் பிரதமர் பதவிக்கான சாத்தியமான வேட்பாளர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். Lekjaa மொராக்கோ கால்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் வரவு-செலவுத் திட்ட அமைச்சராகவும் உள்ளார். Mansouri Marrakech நகர மேயராகவும் தேசிய திட்டமிடல், நகரத் திட்டமிடல், வீடமைப்பு மற்றும் நகர்ப்புற கொள்கை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.
Mansouri பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டால், மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக அவர் பதவியேற்பார்.
2030ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியை ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கலுடன் இணைந்து நடத்துவதற்குத் தயாராகி வரும் நிலையில், புதிய அரசாங்கம் பல பில்லியன் டொலர் முதலீடுகளை மேற்பார்வையிடவுள்ளது.
Al jazeera








