டிக்டொக் செயலியும் அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸும் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்துக்கு 100 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்குவதற்கும், சிறார்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான மாற்றங்களை மேற்கொள்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளன.
சிறார்களைச் செயலியில் அதிக நேரம் செலவிடும் வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில், அலபாமா மாநிலத்துடன் டிக்டொக் மேற்கொண்டுள்ள முதல் இணக்கப்பாடு இதுவாகும்.
எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கவிருந்த நடுவர் விசாரணைக்கு சற்று முன்னதாக இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, அலபாமாவில் உள்ள சிறார்களுக்கு டிக்டொக் பயன்பாட்டில் நாளொன்றுக்கு அதிகபட்சம் இரண்டு மணிநேர வரம்பு விதிக்கப்படுவதுடன், இரவு நேரம் மற்றும் பாடசாலை நேரங்களில் பயன்பாட்டுக்குத் தடையும் அமுல்படுத்தப்படுகிறது.
மேலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் டிக்டொக் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கான புதிய வசதிகளும், வயதை உறுதிப்படுத்தும் நடைமுறைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
சிறார்களின் கணக்குகளை பெரியவர்கள் எளிதில் கண்டறிவதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதுடன், சந்தேகத்திற்குரிய தொடர்புகள் தொடர்பில் பெற்றோருக்கு எச்சரிக்கைகள் அனுப்பப்படும்.
அத்துடன், சிறார்களின் கணக்குகளில் அழகை மாற்றியமைக்கும் “கொஸ்மெடிக் பில்டர்கள்” பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
அலபாமா மாநிலம் விதித்துள்ள இறுதி நிபந்தனைகளை டிக்டொக் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அவற்றை மீறினால் மேலதிகமாக 300 மில்லியன் டொலர் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இதேவேளை, இணக்கப்பாட்டின்படி வழங்க வேண்டிய 100 மில்லியன் டொலர் தொகையை அடுத்த 45 நாட்களுக்குள் அலபாமா மாநிலத்துக்கு செலுத்த டிக்டொக் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து பயனர்களுக்கும், குறிப்பாக பதின்ம வயதினருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே தங்களின் முக்கிய நோக்கம் என டிக்டொக் நிறுவனம் தெரிவித்துள்ளது.








