22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் யாரையும் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது அடக்குவதற்கோ கொண்டுவரப்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் ஆகியவற்றின் இரண்டாம் வாசிப்பு மீதான நாடாளுமன்ற விவாதத்தை இன்று (24) ஆரம்பித்து உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
வழக்குகளை விரைவாக விசாரித்து, பொதுமக்களுக்கு நீதியை வழங்குவதே இந்தத் திருத்தங்களின் பிரதான நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.
“இந்தத் திருத்தத்தை அதிகாரம் செலுத்துவதற்கோ, யாரையும் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது அடக்குவதற்கோ நாம் கொண்டுவரவில்லை. வழக்குகளை விரைவாக விசாரித்து மக்களுக்கு நீதியை வழங்குவதற்காகவே இது கொண்டுவரப்படுகிறது” என அமைச்சர் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு முதல் அரசாங்கம் முன்னெடுத்து வரும் விரிவான நீதித்துறை மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தச் சட்டமூலங்கள் கொண்டுவரப்படுவதாகவும் அவர் கூறினார்.
நியாயமான மற்றும் சமமான சட்டப் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன், நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவை அரசாங்கத்தின் நீதித்துறை மற்றும் சட்ட அமைப்பு தொடர்பான கொள்கைகளில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனமான “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்பதில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் கொள்கைகளின் அடிப்படையிலேயே நீதித்துறை செயற்படுத்தப்படும் என மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“இன்று அந்த வாக்குறுதியின் ஒரு பகுதி நிறைவேற்றப்படும் நாளாகும். இந்த இரண்டு சட்டமூலங்களும் அதற்கான ஒரு பகுதியாகும்” என அமைச்சர் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர், எதிர்க்கட்சிகள் தமது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க முடியும் எனவும், அரசாங்கம் தனது மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.








