மின் கட்டணங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்காக 17,213 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (23) பாராளுமன்றத்தில் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டது.
2026ஆம் ஆண்டுக்காக அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தபோதிலும், ஆண்டின் இறுதி வரை பயன்படுத்தப்படாது என அடையாளம் காணப்பட்ட நிதி ஒதுக்கீடுகளில் இருந்து இந்தக் குறைநிரப்பு பிரேரணைக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2025ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மொத்த அரச செலவின எல்லைக்கோ அல்லது அரசாங்கத்தின் அதிகபட்ச கடன் பெறும் எல்லைக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குறைநிரப்பு பிரேரணை நேற்று (22) அரசாங்க நிதி தொடர்பான குழுவில் விவாதிக்கப்பட்டு, அதன் பின்னர் குழுவின் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








