அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் பயணிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
ஊடகமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மோட்டார் போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர, 2025 ஜூன் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில், 12 வயதுக்குக் குறைந்த சிறுவர்கள், வைத்திய பரிந்துரையின் அடிப்படையில் ஆசனப்பட்டி அணிய முடியாதவர்கள் மற்றும் 135 சென்டிமீற்றருக்கும் குறைவான உயரம் கொண்டவர்கள் ஆசனப்பட்டி அணிவதிலிருந்து விலக்கு பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும், இவ்வாறான நபர்களும் பாதுகாப்பு கருதி இடுப்புப் பகுதியில் அணியும் ‘லேப் பெல்ட்’ (Lap Belt) பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
சிறுவர்கள் மற்றும் குறைந்த உயரம் கொண்டவர்கள் வழக்கமான ஆசனப்பட்டியை அணியும்போது, அது கழுத்துப் பகுதியில் சென்று விபத்து ஏற்படும் சந்தர்ப்பத்தில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதாலேயே அவர்களுக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
இதன் பொருள் அவர்கள் எந்தவொரு பாதுகாப்பு பட்டியையும் அணியக்கூடாது என்பதல்ல எனக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு லேப் பெல்ட் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியைப் பேணுவது மிகவும் முக்கியமானது எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
சாதாரண காலநிலையில் 80 மீற்றர் இடைவெளியைப் பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மழைக்காலங்களில் 100 மீற்றர் இடைவெளியைப் பேணுவது பாதுகாப்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் இடதுபுறப் பாதையிலேயே பயணிக்க வேண்டும் எனவும், முந்திச் செல்லும்போது மாத்திரம் வலதுபுறப் பாதையைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தேவையான அளவை விட மிகவும் குறைந்த வேகத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பிலும் விரைவில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.
அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்குவதற்கான குறைந்தபட்ச வேக வரம்பொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
வீதிகளில் அலட்சியமாக வாகனங்களைச் செலுத்துவது தொடர்பான காணொளிகளை பொலிஸாரின் 070 47 55 600 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு பொதுமக்கள் அனுப்பி வைக்க முடியும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.








