இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிப்பாளர் எவான் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான பிரதிநிதிகள் குழு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்று (22) பாராளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியளிப்பு வசதியின் (EFF) கீழ் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எட்டப்பட்டுள்ள முடிவுகள் தொடர்பான ஏழாவது மதிப்பாய்வு குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இலங்கை பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்து அடைந்துள்ள முன்னேற்றத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக வலியுறுத்தினார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் பிரதமர் விளக்கமளித்தார். அத்துடன், IMF வெளிப்படைத்தன்மையுடன் வழங்கி வரும் ஆதரவுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
பொருளாதார ஸ்திரத்தன்மையைத் தாண்டி நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க IMF வெளிப்படுத்தியுள்ள விருப்பத்திற்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
மேலும், வெளிப்புற காரணிகளை திறம்பட முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், அபிவிருத்திப் பங்காளிகளுடன் இணைந்து செயற்படும்போது நிலையான, பொறுப்புக்கூறல் கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை அடைவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பிலும் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிடம் சொத்து பிரகடனங்கள் மூலம் சமர்ப்பிக்கப்படும் தகவல்களின் தனியுரிமை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு இடையே சமநிலையைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.







