இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கை ஒருநாள் அணித்தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (செப்டம்பர் 22) டர்ஹாமின் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெறவுள்ளது.
தொடைத் தசை காயத்திலிருந்து குணமடைந்துள்ள குசல் மெண்டிஸ், அண்மையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற T20I தொடரில் பங்கேற்கவில்லை. தற்போது சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியுள்ள அவர், இத்தொடருக்காக இலங்கை அணி சிறப்பாகத் தயாராகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரை இலங்கை அணி 3-0 என இழந்திருந்த நிலையில், ஒருநாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்க எதிர்பார்க்கிறது.
T20I தொடரில் இலங்கையின் துடுப்பாட்டம் தொடர்ச்சியான சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தத் தவறியிருந்தது. இந்நிலையில், குசல் மெண்டிஸின் மீள்வரவு இலங்கையின் துடுப்பாட்ட வரிசைக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அசித பெர்னாண்டோவும் ஒருநாள் தொடருக்காக அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.
முதல் ஒருநாள் போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தொடரின் இரண்டாவது போட்டி வியாழக்கிழமை ஹெடிங்லியிலும், மூன்றாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை தி ஓவலிலும் நடைபெறவுள்ளது.








