கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 40ஆவது அகில இலங்கைப் பாடசாலைகள் விளையாட்டு விழாவின் பிரதான நிகழ்ச்சியான மெய்வல்லுநர் போட்டிகள், கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றன.
இம்முறை போட்டித் தொடரில் 4,000க்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்கேற்றதுடன், நான்கு வயதுப் பிரிவுகளின் கீழ் 118 போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் 35,000க்கும் அதிகமான பாடசாலை வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.
14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டிகளில் 23 போட்டிச் சாதனைகளும் இரண்டு புதிய இலங்கை இளையோர் சாதனைகளும் பதிவாகின.
இந்நிலையில், பாடசாலை மெய்வல்லுநர் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் 10 முக்கிய விருதுகளில் ஆறு விருதுகளை MAS Athlete Training Academy வீர, வீராங்கனைகள் கைப்பற்றியுள்ளனர்.
வெவ்வேறு வயதுப் பிரிவுகளின் கீழ் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கும், ஒட்டுமொத்தப் போட்டித் தொடரின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
அந்தவகையில், 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவின் சிறந்த வீரருக்கான விருதை MAS Athlete Training Academy வீரர் கிசல் ஓஷத பெற்றுக்கொண்டார். ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியை 14.06 செக்கன்களில் நிறைவு செய்து அவர் இந்த விருதைத் தனதாக்கிக் கொண்டார்.
அதேபோன்று, 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவின் சிறந்த வீராங்கனைக்கான விருதை MAS Athlete Training Academy வீராங்கனை தில்னி ராஜபக்ஷ பெற்றுக்கொண்டார். முப்பாய்ச்சல் போட்டியில் 12.73 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த அவர், புதிய பாடசாலைப் போட்டிச் சாதனையையும் நிலைநாட்டினார்.
இதற்கிடையில், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவின் சிறந்த வீரருக்கான விருதை MAS Athlete Training Academy வீரர் கவீஷ டில்ஷான் குலதுங்க பெற்றுக்கொண்டார். ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியை 14.02 செக்கன்களில் நிறைவு செய்து அவர் இந்த விருதைப் பெற்றார்.
மேலும், 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவின் சிறந்த வீராங்கனைக்கான விருதை 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரிசன்ஸா ஹிருபமா பெற்றுக்கொண்டார். குறித்த போட்டியை 24.23 செக்கன்களில் நிறைவு செய்த அவர், ஒட்டுமொத்தப் போட்டித் தொடரின் சிறந்த வீராங்கனைக்கான விருதையும் தனதாக்கிக் கொண்டார்.
இதன் மூலம், இம்முறை அகில இலங்கைப் பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டித் தொடரின் இரண்டு பிரதான விருதுகளான சிறந்த வீரர் மற்றும் சிறந்த வீராங்கனைக்கான விருதுகளையும் MAS Athlete Training Academy கைப்பற்றியுள்ளது.
இலங்கையின் திறமையான மெய்வல்லுநர் வீர, வீராங்கனைகளை ஒலிம்பிக் கனவை நோக்கி வழிநடத்தும் நோக்கில் நிறுவப்பட்ட MAS Athlete Training Academy, அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான வசதிகளையும் வாய்ப்புகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக, இலங்கை வீர, வீராங்கனைகள் மற்றும் விளையாட்டுப் பயிற்சியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்குத் தேவையான சர்வதேசப் பயிற்சி ஆலோசனைகள் மற்றும் நவீன பயிற்சி முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், சர்வதேச மட்டத்தில் அனுபவம் வாய்ந்த மெய்வல்லுநர் பயிற்சி நிபுணர்களை இலங்கைக்கு அழைத்து, நாட்டில் முதலாவது வதிவிடப் பயிற்சி அமர்வை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் மூலம், இலங்கை வீர, வீராங்கனைகள் சர்வதேசப் போட்டிகளில் வெற்றிபெறுவதற்குத் தேவையான உயர்தரப் பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.









