இலங்கையிலிருந்து பதிவேற்றப்பட்ட 8 இலட்சத்து 71 ஆயிரத்து 446 TikTok காணொளிகள், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சமூக வழிகாட்டுதல்களை மீறியமைக்காக நீக்கப்பட்டுள்ளதாக TikTok நிறுவனத்தின் அண்மைய வெளிப்படைத்தன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனவரி முதல் மார்ச் வரையான முதலாம் காலாண்டில் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 89 காணொளிகளும், ஏப்ரல் முதல் ஜூன் வரையான இரண்டாம் காலாண்டில் 4 இலட்சத்து 30 ஆயிரத்து 357 காணொளிகளும் நீக்கப்பட்டுள்ளன.
முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இரண்டாம் காலாண்டில் காணொளிகள் நீக்கப்பட்ட எண்ணிக்கை 10,732ஆல் அல்லது சுமார் 2.4 சதவீதத்தால் குறைந்துள்ளது.
எந்த வகையான காணொளிகள் நீக்கப்பட்டன?
TikTok நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு அறிக்கையின்படி, உலகளாவிய ரீதியில் நீக்கப்பட்ட காணொளிகளில் பெரும்பாலானவை உணர்வுபூர்வமான அல்லது முதிர்ச்சியான உள்ளடக்கங்கள், மனநலம் மற்றும் நடத்தை சார்ந்த உள்ளடக்கங்கள், பாலியல் தன்மையை வெளிப்படுத்தும் காணொளிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் உள்ளடக்கங்களாகும்.
உலகளாவிய ரீதியில் நீக்கப்பட்ட காணொளிகளின் வகைப்பாடு வருமாறு:
- 19.5 சதவீதம் – உணர்வுபூர்வமான அல்லது முதிர்ச்சியான உள்ளடக்கங்கள்.
- 16.1 சதவீதம் – மனநலம் மற்றும் நடத்தை சார்ந்த உள்ளடக்கங்கள்.
- 13.8 சதவீதம் – உடல் வெளிப்பாடு மற்றும் பாலியல் தன்மையை வெளிப்படுத்தும் உள்ளடக்கங்கள்.
- 13.7 சதவீதம் – பாதுகாப்பு மற்றும் நாகரிகம் தொடர்பான விதிமீறல்கள்.
- 13.5 சதவீதம் – ஆபத்தான செயல்கள் மற்றும் சவால்கள் தொடர்பான காணொளிகள்.
- 1.8 சதவீதம் – தளத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் திருத்தப்பட்ட மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள்.
எனினும், இலங்கையிலிருந்து நீக்கப்பட்ட காணொளிகளின் வகைகள் தொடர்பான தனியான விபரங்களை TikTok வெளியிடவில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள சதவீதங்கள் உலகளாவிய தரவுகளையே பிரதிபலிக்கின்றன.
மீண்டும் மீளமைக்கப்பட்ட 33,000க்கும் அதிகமான காணொளிகள்
இதற்கிடையில், இலங்கையில் முதலாம் காலாண்டில் நீக்கப்பட்ட 20,051 காணொளிகளும், இரண்டாம் காலாண்டில் நீக்கப்பட்ட 12,960 காணொளிகளும் பின்னர் மீளமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்தமாக 33,011 காணொளிகள் மீளமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இரண்டாம் காலாண்டில் இலங்கையில் நீக்கப்பட்ட காணொளிகளில் 99.4 சதவீதமானவை பயனர்களால் முறைப்பாடு செய்யப்படுவதற்கு முன்னரே நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன. முதலாம் காலாண்டில் இந்த வீதம் 99.1 சதவீதமாகக் காணப்பட்டது.
எனினும், முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் நீக்கப்பட்ட காணொளிகளின் வீதம் முதலாம் காலாண்டில் 95 சதவீதமாக இருந்த நிலையில், இரண்டாம் காலாண்டில் 93.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இலங்கையில் பதிவேற்றப்பட்ட மொத்த காணொளிகளில் நீக்கப்பட்டவற்றின் வீதம் இரண்டு காலாண்டுகளிலும் 0.5 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
உலகளாவிய ரீதியில் 18.8 கோடிக்கும் அதிகமான காணொளிகள் நீக்கம்
உலகளாவிய ரீதியில் இரண்டாம் காலாண்டில் சுமார் 18 கோடியே 83 இலட்சம் காணொளிகளை TikTok நீக்கியுள்ளது.
இவற்றில் 97.4 சதவீதமான காணொளிகள் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தானியங்கி கண்காணிப்புத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.
அதே காலப்பகுதியில், உலகளாவிய ரீதியில் 27 கோடியே 84 இலட்சம் கருத்துகள், 14 கோடியே 68 இலட்சம் போலிக் கணக்குகள் மற்றும் 13 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்குச் சொந்தமானவை எனச் சந்தேகிக்கப்பட்ட 2 கோடியே 68 இலட்சம் கணக்குகளையும் நிறுவனம் நீக்கியுள்ளது.
தீங்கு விளைவிக்கும் மற்றும் தளத்தின் விதிமுறைகளை மீறும் உள்ளடக்கங்களை விரைவாக அடையாளம் காண்பதற்கும், தளத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் தானியங்கி கண்காணிப்பு முறைமைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக TikTok நிறுவனம் தெரிவித்துள்ளது.








