ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் பாகிஸ்தான் நடத்தியதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதலில் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காயமடைந்துள்ளனர்.
குனார் மாகாணத்தின் நுர்கல் மாவட்டத்தில் திங்கட்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, மாகாண பேச்சாளர் ஃபரீத் தெஹ்கான் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
குனார் மாகாணத்தில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்ததாகவும் தலிபான்களின் துணைப் பேச்சாளர் ஹம்துல்லா ஃபித்ரத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஆப்கானிஸ்தானில் மூன்று இலக்குகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 28 “பயங்கரவாதிகள்” கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தகவல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பக்திகா மாகாணத்தின் பர்மல் மாவட்டத்தில் இரு இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அங்கு ஒரு கடையும் ஆளில்லாத வீடொன்றும் அழிக்கப்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் ஹம்துல்லா ஃபித்ரத் கூறியுள்ளார்.
சுமார் மூன்று மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பீட்டளவில் அமைதி நிலவிய நிலையில், இந்தத் தாக்குதல்கள் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளன.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் கடந்த பெப்ரவரி மாதம் முதல் மோசமடைந்துள்ளன. ஆப்கானிஸ்தான் பிரதேசத்தில் இருந்து ஆயுதக் குழுக்கள் எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. எனினும், தலிபான் அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, பாகிஸ்தானில் இடம்பெறும் வன்முறைகள் அந்நாட்டின் உள்நாட்டு பிரச்சினை எனத் தெரிவித்துள்ளது.
இந்த வான்வழித் தாக்குதல்களுக்கு சில நாட்களுக்கு முன்னர், வடமேற்கு பாகிஸ்தானின் கோஹாட் பகுதியில் பொலிஸ் நிலைய வளாகத்தில் உள்ள பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தலிபானின் ஒரு பிரிவு தெரிவித்திருந்தது. அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் பெரும்பாலானோர் பொலிஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது 21 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் தளமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் ஆயுதக் குழுக்களே காரணம் என பாகிஸ்தான் தகவல் அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
(Al Jazeera)








