சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், இலங்கை பாராளுமன்றத்தின் விசேட தூதுக்குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (22) பாராளுமன்றில் இடம்பெற்ற அமர்வில் இதனைத் தெரிவித்தார்.
பாராளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலியின் தலைமையில் சவூதி அரேபியாவுக்குச் செல்லவுள்ள இந்தத் தூதுக்குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த தூதுக்குழு சவூதி அரேபிய மன்னரைச் சந்திக்கவுள்ளது.
இதன்போது, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியிலான பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனுப்பவுள்ள கடிதமும் சவூதி மன்னரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை, சிவராசா அனோஜன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக சட்டரீதியாக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளமையினால், அவரது வழக்கிற்காக இதுவரை ஏற்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அனைத்து செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேன்முறையீட்டுக்காக அவரது குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட பணமும் மீள வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், அனோஜனை விடுவிப்பதற்கான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.








