Afra Ansar
COLOMBO
ரஷ்யா மீது ஞாயிற்றுக்கிழமை (20) உக்ரைன் மேற்கொண்ட பாரிய தாக்குதலில் முதல் முறையாக ‘Pelican’ எனப்படும் ஆயுதம் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை X தளத்தில் பதிவிட்ட செலென்ஸ்கி, மொஸ்கோ பிராந்தியத்தை இலக்காகக் கொண்ட நீண்டதூரத் தாக்குதல்கள் “மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை” ஏற்படுத்தியதாகக் கூறினார்.
ரஷ்யாவின் முக்கிய எண்ணெய்த் துறை சார்ந்த ஒரு நிலையமும், அந்த நாட்டின் தளவாட வசதியொன்றும் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
“இவை போருக்கு ஆதரவளிக்கும் இராணுவ இயந்திரத்தைத் தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான பில்லியன் கணக்கான டொலர்களாகும்” என செலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல்களில் FP-1, RZ-100, MICH-2000, Palianytsia, Vendetta, Liutyi, Bars, Flamingo, Sichen மற்றும் Pelican உள்ளிட்ட பல்வேறு ஆயுத அமைப்புகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி நாளில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் குறைந்தது மூவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொஸ்கோ மேயர் செர்கெய் சோபியானின், 1,600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதாகவும், அவற்றில் சுமார் 450 ட்ரோன்கள் மொஸ்கோவை நோக்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
‘Pelican’ ஏவுகணையா? ட்ரோனா?
‘Pelican’ பயன்படுத்தப்பட்டதாக செலென்ஸ்கி தெரிவித்துள்ள நிலையில், அது தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணையா அல்லது ட்ரோனா என்பது தொடர்பில் இராணுவ ஆய்வாளர்களிடையே கேள்விகள் எழுந்துள்ளன.
கடந்த வாரம் போலந்தில் நடைபெற்ற 34ஆவது சர்வதேச பாதுகாப்புத் தொழில்துறை கண்காட்சியில், உக்ரைனின் பாதுகாப்பு நிறுவனமான Fire Point நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, FP-7 எனப்படும் தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணையை உக்ரைன் சில வாரங்களில் பயன்படுத்தத் தொடங்கக்கூடும் எனத் தெரிவித்திருந்தார்.
புதிய ஆயுதம் சுமார் 200 கிலோமீற்றர் (125 மைல்) தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடியதுடன், 150 கிலோகிராம் வரையான போர்க்கருவியை சுமந்து செல்லக்கூடியது என Fire Point நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இரினா டெரெக் தெரிவித்துள்ளார்.
FP-7 தரையில் இருந்து ஏவப்படும் ஆயுதமாகும். இதன் அதிகபட்ச வேகம் வினாடிக்கு 1,500 மீற்றர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fire Point நிறுவனத்தின் நிறுவுநரும் தலைமை வடிவமைப்பாளருமான டெனிஸ் ஷ்டிலெர்மன், இந்த அமைப்பு அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ATACMS தரையில் இருந்து தரையை நோக்கி ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை விட குறைந்த செலவில் தயாரிக்கப்படுவதாக கடந்த மார்ச் மாதம் உக்ரைன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
உக்ரைன் தனது முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையை இலையுதிர் காலத்திலேயே பயன்படுத்தத் தொடங்கும் என எதிர்பார்ப்பதாகவும் செலென்ஸ்கி கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
எனினும், FP-7 தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணையே ‘Pelican’ என இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
உக்ரைனின் சில ஊடகங்கள் FP-7 மற்றும் Pelican ஆகிய இரண்டையும் தொடர்புபடுத்தியுள்ளன.
அதேவேளை, ‘The New Voice of Ukraine’ செய்தி நிறுவனம், Fire Point நிறுவனம் ‘Flamingo’ எனப்படும் FP-5 க்ரூஸ் ஏவுகணையையும் தயாரித்து வரும் நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘Pelican’ என்ற பெயரை வர்த்தகச் சின்னமாகப் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, RBC-Ukraine செய்தி நிறுவனம் பெயர் குறிப்பிடப்படாத ஆதாரங்களை மேற்கோள்காட்டி, ‘Pelican’ ஒரு விமான வடிவிலான ட்ரோன் என செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஊடகத் தகவல்களை Al Jazeera சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை.
உக்ரைனின் ஆயுத உற்பத்தி எவ்வாறு உள்ளது?
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சு கடந்த பெப்ரவரி மாதம், நாட்டின் உள்நாட்டு ஆயுதத் தொழில்துறை “முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை” பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தது.
அதன்படி, ஆயுத உற்பத்தித் திறன் 50 மடங்கு அதிகரித்து 50 பில்லியன் டொலர் மதிப்பை எட்டியுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
இதன் விளைவாக, உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தற்போது உக்ரைன் பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை வழங்குவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை X தளத்தில் பதிவிட்ட செலென்ஸ்கி, ரஷ்யா போரில் பயன்படுத்தி வரும் ஈரானில் தயாரிக்கப்பட்ட Shahed ட்ரோன்களை எதிர்கொள்ளும் வகையில், உக்ரைனின் பாதுகாப்புச் சேவையின் இராணுவ எதிர் புலனாய்வுப் பிரிவு புதிய இடைமறிப்பு ட்ரோன் ஒன்றை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த புதிய ட்ரோன் ஏற்கனவே வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“உக்ரைனுக்கு அதிக பாதுகாப்பை வழங்குவதற்காக நாம் படிப்படியாக முன்னேறி வருகிறோம். நமக்குத் தேவையான ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்க தினமும் பணியாற்றி வரும் அனைத்து வடிவமைப்பாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கும் நன்றி” என செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம், உக்ரைன் ஆயுதப் படைகளின் முன்னாள் தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி, பெப்ரவரி மாதத்தில் Shahed வகை தாக்குதல் ட்ரோன்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இடைமறிப்பு ட்ரோன்கள் மூலம் அழிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
உக்ரைனின் இடைமறிப்பு ட்ரோன்களின் செயல்திறன் காரணமாக, ஈரானிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் இலக்கு வைக்கப்பட்ட வளைகுடா நாடுகளிடையேயும் அவை தொடர்பில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா மீதான தாக்குதல்கள் எவ்வாறு மாறியுள்ளன?
ரஷ்யாவும் உக்ரைனும் அண்மைக்காலங்களில் ஒருவருக்கொருவர் சொந்தமான உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.
எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தளவாட மையங்கள் உள்ளிட்ட முக்கிய இலக்குகள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன.
ஜூலை மாதம் முதல், ரஷ்யாவின் Wildberries என்ற இணையவழி வர்த்தக நிறுவனத்துக்குச் சொந்தமான கிடங்குகளையும் உக்ரைன் பலமுறை தாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் மொஸ்கோவின் விநியோகச் சங்கிலிகளை பாதிப்பதற்கும் ரஷ்யப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குமான நடவடிக்கைகளாக விவரிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கியுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக Financial Times திங்கட்கிழமை செய்தி வெளியிட்டது.
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு ட்ரம்ப் செலென்ஸ்கியிடம் வலியுறுத்தியதாகவும், இந்தத் தாக்குதல்கள் உலகளாவிய டீசல் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கி எரிபொருள் விலைகள் அதிகரிப்பதற்கான கவலைகள் காரணமாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
(Al Jazeera)








