மக்காவுக்கு அருகில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் ட்ரோன் இடைமறிக்கப்பட்டதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ள நிலையில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சவூதி அரேபியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்தின் புனித நகரமான மக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் “எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.
மக்காவில் வசிப்பவர்கள் மற்றும் யாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சவூதி அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுத்ததை வரவேற்பதாகவும் அன்வர் குறிப்பிட்டுள்ளார்.
“பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது” என அவர் தனது X பதிவில் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் கூடும் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்படும் அனைத்து தாக்குதல்களையும், குறிப்பாக புனிதத் தலங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்துமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், பதற்றத்தைத் தணிப்பதற்காக அனைத்து தரப்பினரும் தாமதமின்றி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், புனிதத் தலத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஹூதிகள் மறுத்துள்ளதுடன், அதனை “அருவருப்பான பொய்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.








