ஏ. சி. பௌசுல் அலிம்
கொழும்பு: இளைஞர்களின் சர்வதேச பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், International Diplomats அமைப்பின் 8ஆவது Model United Nations (MUN) மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது.
இதன்படி, நவம்பர் 14 முதல் 17ஆம் திகதி வரை கொழும்பு Waters Edge இல் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் பிரதிநிதிகள் பங்கேற்று சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர்.
2022ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை ஆரம்பித்த International Diplomats அமைப்பு, பல்வேறு நாடுகளில் சர்வதேச MUN மாநாடுகள் மற்றும் இளைஞர்களுக்கான இராஜதந்திர நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றது.
இலங்கையில் நடைபெறவுள்ள இம்மாநாடு, குறித்த அமைப்பினால் நாட்டில் ஏற்பாடு செய்யப்படும் இரண்டாவது MUN நிகழ்வாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடி தமது கருத்துகள் மற்றும் பார்வைகளைப் பகிர்ந்துகொள்வதற்கான சர்வதேச தளமாக இம்மாநாடு அமையவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட MUN அமர்வுகள் மூலம், சர்வதேச பிரச்சினைகளை ஆராய்தல், கருத்துகளை முன்வைத்தல், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதல் மற்றும் தீர்வுகளை முன்மொழிதல் உள்ளிட்ட திறன்களை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெறவுள்ளனர்.
இளைஞர்களிடையே சர்வதேச புரிதல், பொறுப்புணர்வு மற்றும் தலைமைத்துவ ஆற்றலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநாட்டில் பங்கேற்பது மற்றும் மேலதிக தகவல்களைப் பெறுவது தொடர்பான விபரங்களை International Diplomats அமைப்பின் அதிகாரப்பூர்வ தகவல் தளங்கள் மற்றும் இலங்கைக்கான தொடர்பு வழிமுறைகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.







